மீத்தேன், நியூட்ரினோ உள்ளிட்ட மத்திய அரச திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அமைப்புகளை தடை செய்வதற்கான காரணங்களை கண்டறிந்து தெரிவிக்குமாறு இந்திய உளவுப்பிரிவு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.
கூடங்குளம் அணு மின் நிலைய விரிவாக்க திட்டம், மீத்தேன், நியூட்ரினோ என தமிழக மக்களுக்கு விருப்பம் இல்லாத திட்டங்களை, தமிழகத்தில் மத்திய அரசு செயல்படுத்தி வருகின்ற நிலையில் இஅதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீவிர போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தப் போராட்டங்களுக்கான காரணங்களை கண்டறிந்து உளவுப்பிரிவு காவல்துறையினர் ஆய்வு நடத்தி, ஒரு அறிக்கையையும் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளனர்.
அதில், 11 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மக்களை தூண்டி விடுகின்றனர் எனவும் மத்திய அரசின் திட்டங்களில் உள்ள அபாயங்களை மக்களிடம் அறிவியல் விளக்கத்துடன் கூறுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்களை கட்டுப்படுத்தினால் மக்கள் போராட்டங்கள் நடத்துவது 90 சதவீதம் குறைந்து விடும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த அறிக்கையை ஆய்வு செய்த மத்திய அரச அதிகாரிகள், அந்த அமைப்புகளை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை கண்டுபிடித்து தெரிவிக்குமாறு கோரிக்கை விடுத்ததனைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக செயல்படும் அமைப்புகளை கண்காணிக்கும் பணியில் மத்திய உளவுப்பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த அமைப்புகளை செயல்படவிடாமல் தடுக்க வேண்டும் அல்லது அமைப்பையே தடை செய்ய வேண்டும் என்னும் நோக்கில் குறித்த 11 அமைப்புகளையும் தீவிரமாக கண்காணிக்கும் பணியில் உளவுப்பிரிவினர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது