குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டின் இளைய சந்ததியினருக்கு சிறந்த நாட்டையும் சமூகத்தையும் உருவாக்கிக்கொடுக்க அனைவரும் ஒற்றுமையாக தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குருணாகல் நிகவரெட்டிய நகரில் நேற்று மாலை நடைபெற்ற தேசிய இளைஞர் புரம் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டார். அங்கு உரையாற்றிய பிரதமர், நாட்டில் உள்ள பிரதேசங்களில் அமைதியை பாதுகாக்க அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனக்கூறியுள்ளார்.
முகப்புத்தக சமூக வலைத்தளத்தை தடை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முகப்புத்தகம் மூலம் சமூகத்திற்கு நல்ல விடயங்களும் நடக்கின்றன. அதேபோல் கெடுதியானவைகளும் நடக்கின்றன. இதற்கு கண்டி தெல்தெனியவில் நடந்த சம்பவங்கள் சிறந்த உதாரணம்.
சிலர் இணையத்தளங்கள் வழியாக இனவாத்தை பரப்புகின்றனர். அவற்றுக்கு முகப்புத்தகம் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது தவறானது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.