குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தனது பதவியை இழக்கக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், நிறைவேற்றப்படாவிட்டாலும் சம்பந்தன் பதவி இழக்க நேரிடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் பதவிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படும் போது அதனை எதிர்ப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் என்ற ரீதியில் சம்பந்தனுக்கு தார்மீக உரிமை கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மறுபுறத்தில், பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் அரசாங்கம் கவிழ்ந்து விடும் எனவும் அப்போதும் சம்பந்தனினால் எதிர்க்கட்சித் தலைவராக நீடிக்கக்கூடிய சாத்தியமில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அரசாங்கம் வெற்றினாலும் தோற்றாலும் எதிர்க்கட்சித்தலைவர் பதவியில் மாற்றம் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்படுகிறது.