குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
பிரதமருக்கு எதிராக நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் நடைபெறும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதத்தில் பிரதமர் வெற்றி பெற்றாலும் தோற்றாலும் உறுதியாக புதிய அரசாங்கம ஒன்று உருவாகும் என அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமர் வெற்றி பெற்றால், தேசிய அரசாங்கம் முற்றுபெறும் என்பதுடன் பிரதமருக்கு ஆதரவான தரப்பினருடன் புதிய அரசாங்கம் அமைக்கப்படும். இதற்கு அமைய நம்பிக்கையில்லாப பிரேரணைக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் அரசங்கத்தில் இருந்து வெளியேற நேரிடும். தேசிய அரசாங்கம் முடிவுக்கு வரும் என்பதால், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை 30 ஆக குறைக்கப்படும்.
எவ்வாறாயினும் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தால், நாடாளுமன்றத்தில் பெருபான்மையான உறுப்பினர்கள் ஆதரவை பெற்றவர் பிரதமராக தெரிவே செய்யப்பட்டு புதிய அரசாங்கம் ஆட்சியமைக்கும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பன ஏற்கனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று மாலை நடைபெறும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் இது சம்பந்தமாக உத்தியோகபூர்வமான முடிவு எடுக்கப்படும் என சுதந்திரக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.