குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்பான தனது தீர்மானத்தை தெரியப்படுத்த ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம உட்பட அந்த கட்சியின் மூத்த அமைச்சர்களை இன்று மாலை தன்னை சந்திக்குமாறு அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகி அரசாங்கத்தை பாதுகாக்க உதவுமாறு ஜனாதிபதி இவர்களிடம் கோரிக்கை விடுக்கலாம் எனவும் ஐக்கிய தேசியக்கட்சியினர் சாதகமான பதிலை வழங்காது போனால், ஜனாதிபதி நாளைய தினம் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் மதியம் ஐக்கிய தேசியக்கட்சியின் ராஜாங்க அமைச்சர்கள் சிலரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடித்து பிரதமர் ரணில் விக்ரசிங்க வெற்றி பெற்றாலும் அவருடன் தொடர்ந்தும் பணியாற்ற முடியாது என ஜனாதிபதி கூறியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று முன்தினம் ராஜாங்க அமைச்சர்களான அஜித் பீ. பெரேரா, எரான் விக்ரமரத்ன, ஹர்ச டி சி்ல்வா ஆகியோரை தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து கலந்துரையாடியுள்ளதுடன் இதன் போது தனது இந்த நிலைப்பாட்டை தெரியப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக இவர்கள் கலந்துரையாடியுள்ளனர். நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமர் வெற்றி பெற்றால் என்ன செய்ய வேண்டும் என ஜனாதிபதி இவர்களிடம் வினவியுள்ளார்.
அதேவேளை நேற்று கருத்து வெளியிட்டிருந்த ராஜாங்க அமைச்சர் அஜித் பீ. பெரேரா, நேற்று முன்தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் குழுவினர் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்ததாகவும் கூறியுள்ளார்.