தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது மதிப்பை இழந்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெட்கமில்லாமல் வடக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை கைப்பற்ற ஈபிடிபியுடன் இணைந்து செயற்படுவது அருவருப்பான விடயம் எனவும் அவர் கூறியுள்ளார்.
மட்டக்களப்பில் உள்ளூராட்சி சபைகளுக்கு தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வில் நேற்று கலந்துக்கொண்டு உரையாற்றிய அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் மத்தியில் மதிப்பை இழந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இயலாமையை புரிந்துக்கொண்டுள்ளனர. இதனால், கூட்டமைப்பு நாளுக்கு நாள் மக்களிடம் இருந்து விலகி வருகிறது.
அத்துடன் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை பெற்றுள்ளமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வெற்றியானது என்னுடைய வெற்றி.
மிக விரைவில் நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் மாற்றம் ஏற்படும். அப்போது கிழக்கு மாகாணத்தின் ஆட்சி அதிகாரம் எனக்கு கிடைக்கும். அந்த தருணம் வரும் வரை எதிர்பார்த்து காத்து இருக்கின்றேன். அப்போது மக்களுக்கு தேவையான சகல சேவைகளையும் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விநாயகமூர்த்தி முரளிதன் குறிப்பிட்டுள்ளார்.