தமிழகத்தின் திரைத்துறை பிரச்னையை தீர்க்க தனி வாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருக்கும் நிலையில், தமிழக அரசுக்கு விஷால் நன்றி தெரிவித்திருக்கிறார்.
திரையங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்கள் திரையிடும் நிறுவனங்கள் கட்டணத்தை குறைக்கக் கோரி பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 1ஆந் திகதி முதல் தியேட்டர்களில் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதேபோல் படப்பிடிப்பு நடத்தவும் தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக நமது திரைத்துறையின் நலன் கருதி தமிழ், தெலுங்கு, மலையாள மற்றும் கன்னட தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து டிஜிட்டல் சேவை அளிப்பவர்களுக்கு எதிராக மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்கள் வெளியிடுவதில்லை என்று முடிவு எடுத்து நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், தேவைப்பட்டால் திரைத்துறை பிரச்னையை தீர்க்க தனி வாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் சங்க பிரச்னை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கடம்பூர் ராஜூ கூறியிருந்தார்.
இதையடுத்து நடிகர் விஷால் அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான திரைத்துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என்று உறுதியளித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் *திரு கடம்பூர்ராஜு* அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன், திரைத்துறை சம்பந்தப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் அரசு விரைவில் நிறைவேற்றும் என நம்புகின்றோம் என்று விஷால் அதில் குறிப்பிட்டுள்ளார்.