குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
கிளிநொச்சி மாவட்டத்தில் தரம் ஒன்றில் இணையும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைவடைந்து செல்கிறது எனவும் இது இனவிருத்தியின் வீழ்ச்சியினையே காட்டுகிறது என்றும் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.
இன்று(02) கிளிநொச்சியில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவில் மாவட்டக் கல்வி அபிவிருத்தி தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
எமது மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் ஒவ்வொரு வருடமும் தரம் ஒன்றில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை பார்க்கின்ற போது தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாக குறைவடைந்து செல்கிறது. அந்த வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு 2565 மாணவர்களும்,2017 ஆம் ஆண்டு 2319 மாணவர்களும், 2018 ஆம் ஆண்டு 2180 மாணவர்களும் தரம் ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலைமையானது மாவட்ட இனவிருத்தியின் வீழ்ச்சியினையே காட்டுகிறது எனவும் தெரிவித்த அவர் தமிழ் மக்கள் மத்தியில் கூடுதலாக குழந்தைகளை பெற்றுக்கொள்கின்றவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் திட்டங்களை மேற்கொள்வது அவசியமானது எனவும் தெரிவித்தார்