எஸ்/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் பாரத் பந்த்தில் வன்முறை ஏற்பட்டதில் மத்தியபிரதேசத்தில் ஆறு பேரும், ராஜஸ்தானில் ஒருவரும் என மொத்தம் 7 தலித்துகள் கொல்லப்பட்டனர்.
எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தலித் அமைப்புகள் திங்கள்கிழமைபாரத் பந்த் நடத்த அழைப்பு விடுத்திருந்தன. இதையொட்டி,
- நாட்டின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
- மத்தியப் பிரதேசத்தின் குவாலியரின் தாடீபுர் பகுதியில் இருவர் உயிரிழந்திருப்பதாக மாநில போலீசார் தெரிவித்தனர்.
- முரைனா மற்றும் பிண்ட் பகுதியில் போலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.
- குவாலியரில் 6 காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- பிண்ட் பகுதியில் பஜ்ரங் தள் மற்றும் பீம் சேனாவினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது.
- உத்தரப்பிரதேச மாநிலம் முஜாஃபர்நகர், ஹாபுட் மற்றும் ஆஜம்கட்டில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டன. பல கடைகளும், வாகனங்களும் தீ வைக்கப்பட்டன.
நாடு தழுவிய பாரத் பந்த்
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினால் சீற்றமடைந்த தலித் அமைப்புகள் ஏப்ரல் இரண்டாம் தேதியன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி இன்று நடைபெற்ற போராட்டங்களில் பல்வேறு இடங்களில் வன்முறைகள் நடந்தன. சில நாட்களுக்கு முன்னதாக உச்ச நீதிமன்றம், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக வழக்குகள் பதிவு செய்யவும், கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதித்து தீர்ப்பளித்தது. அதன்படி இன்று நடைபெற்ற போராட்டங்களில் பல்வேறு இடங்களில் வன்முறைகள் நடைபெற்றன.
மத்திய பிரதேசம்
- மத்திய பிரதேச மாநில பத்திரிகையாளர் ஷுரைஹ் நியாஜியின் கருத்துப்படி, நாலு பேர் உயிரிழந்துள்ளனர்.
- குவாலியரின் தாடிபூரில் இருவர் உயிரிழந்தனர். பிண்ட் பகுதியில் ஒருவர் போலிசாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு பலியானார்.
- முரைனாவில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவர் ஒருவர் போலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்.
- பிண்ட் பகுதியில் பீம் சேனாவுக்கும், பஜ்ரங் தள் அமைப்புக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.
- வன்முறைகள் அதிகரித்ததை கண்ட மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
- குவாலியரின் 6 காவல் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் முரைனாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
- மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் செளஹான் இன்று காலையில் அவசரக்கூட்டத்தை கூட்டி நிலைமை தொடர்பாக கலந்தாலோசித்தார்.
உத்தரப்பிரதேசம்
- மீரட்டில் புறக்காவல் நிலையத்திற்கு தீவைக்கப்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.
- ஆக்ராவில் போராட்டக்காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையில் கைகலப்பு மூண்டது.
- முஜாஃபர்நகர் சாலையில் பயணிகள் பேருந்து ஒன்றுக்கு ஆர்ப்பாட்டக்கார்ர்கள் தீவைத்தனர். பேருந்தில் இருந்த பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு இடையில் பேருந்தில் இருந்து வெளியேறினார்கள்.
- காஜியாபாத், மீரட், ஆக்ராவில் ரயில் மறியல் போராட்டத்திற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
- டெல்லி-ஜான்சி ரயில் மார்க்கத்தில் ரயில் சேவையில் சுணக்கம் ஏற்பட்டதால் ரயில்கள் தாமதமாக செல்கின்றன.
- உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு வன்முறை ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு போலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- அதிவிரைவுப் படையும், துணை ராணுவப்படைகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
- மீரட், முஜாஃபர்நகர், ஆக்ராவில் நிலைமை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
போராட்டத்திற்கான காரணம் என்ன?
சில நாட்களுக்கு முன்னதாக உச்ச நீதிமன்றம் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்ட்த்தின் கீழ் உடனடியாக வழக்குகள் பதிவு செய்யவும், கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதித்தது. நீதிபதி ஏ.கே. கோயல் மற்றும் யூ.யூ.லலித் ஆகியோர் அடங்கிய சட்ட அமர்வு, ஏழு நாட்களுக்குள் வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணை முடிக்கப்படவேண்டும் என்று கூறியது. இந்த்த் தீர்ப்பினால் தலித் அமைப்புகள் சீற்றமடைந்தன. எனினும், தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
போராட்டம் பற்றி யார் என்ன சொன்னார்கள்?
“மக்களின் எதிர்ப்பை புரிந்து கொள்ள முடிந்தாலும், எதிர்க்கட்சிகள் ஏன் இந்த விஷயத்தை அரசியலாக்குகின்றன? அம்பேத்கருக்கு பாரத ரத்னா கொடுக்க முன்வராத காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் இப்போது அவரின் ஆதரவாளர்களைப் போல நாடகமாடுகின்றன” என்று சொல்கிறார் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான்.
“உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைதியை பேணிகாக்கவேண்டும், வன்முறைகளை தவிர்க்கவேண்டும்” என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
BBC