குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் நடக்காத கெடுதியான சம்பவங்கள் தற்போதைய ஆட்சியின் கீழ் வடக்கில் நடப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் உள்ள தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து கேட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். நாட்டின் பிரதமருக்கு எதிராக தற்போது நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்தது. எனினும் அரசாங்கம் மூன்று ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கவில்லை. எனினும் அரசாங்கம் அரசியலமைப்புச்சட்டம் சம்பந்தமான செயற்பாடுகளை முன்னெடுத்தது. ஆனால் அந்த செயற்பாடுகள் தொடர்பில் இதுவரை தெளிவில்லை.
வடக்கில் தொழில் வாய்ப்பு இல்லாத பிரச்சினை உக்கிரமடைந்துள்ளது. பல பட்டத்தாரிகள் இருந்த போதிலும் அவர்களுக்கு தொழில் வாய்ப்பில்லை. உற்பத்திகள் வடக்கில் நடைபெறுவதில்லை. இந்த நிலைமையானது வடக்கில் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கில் வேலை வாய்ப்பின்றி பலர் இருக்கும் நிலையில், அங்குள்ள வேலை வாய்ப்புகள் வெளியாருக்கு வழங்கப்படுகின்றன. வடக்கில் மின்சாரம் மற்றும் நீர் விநியோக கட்டணங்களை அளவிடுவோர் கூட வெளியிடங்களை சேர்ந்த சிங்களவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு தமிழ் வார்த்தை கூட தெரியாது. பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களை எடுத்துக்கொண்டாலும் எந்த மாற்றங்களும் இல்லை. வடக்கில் உள்ள தமிழ் மக்கள் எப்படி இவர்களுடன் கொடுக்கல் வாங்கல்களை செய்வார்கள் என்று எண்ணிப் பாருங்கள். இதன் காரணமாகவே பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேலும் வடக்கில் பாதுகாப்பு படையினர் இன்னும் குறைக்கப்படவில்லை. தற்போதைய அரசாங்கமும் கடந்த அரசாங்கத்தை போலவே செயற்பட்டு வருகிறது என தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.