குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நேற்று மாலை இரணைமடுப் பகுதியில் இருந்து முறுகண்டி நோக்கி சென்றுகொண்டிருந்த கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவரை இரணைமடுச் சந்திக்கு சுமார் ஒருகிலோமீற்றார் அப்பால் வீதியின் மறு புறத்தில் நின்ற மாங்குளம் போக்குவரத்துப் காவல்துறையினர் மறித்துள்ளனர்
குறித்த ஊடகவியலாளர் வேக நடைமுறைக்கு மேல் 68 கிலோமீற்றர் வேகத்தில் செலுத்தியதாக அவரிடம் இருந்து சாரதி அனுமதிப் பத்திரத்தினை வாங்கிய ஓர் தமிழ் போக்குவரத்துப் காவல்துறை உத்தியோகத்தர் எழுதுவதற்கு தயாரான பொழுது தனது வேகத்தை வேகத்தினை அளக்கும் கருவியில் காட்டுமாறு கோரியிருக்கின்றார்
வேகத்தினை கருவியூடாக கணிக்காமல்தான் மறித்ததாகவும் நீங்கள் வேகமாகத்தான் சென்றீர்கள் எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். இதற்கு குறித்த ஊடகவியலாளர் தான் ஒரு ஊடகவியாளார் என்பதனை அடையாள படுத்திக் கொண்டு நீங்கள் எவ்வாறு நான் 68 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்தேன் எனக் கூறுவீர்கள் என கேட்டுள்ளார்
இதற்கு ஒன்றுமே பதிலளிக்காத குறித்த இரு போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர்கள் பத்துநிமிடமாக மறித்து வைத்திருந்ததன் பின்னர் சாரதி அனுமதிப் பத்திரத்தினை வழங்கி நீங்கள் செல்லலாம் எனக் கூறியுள்ளனர்
இதற்கு குறித்த ஊடகவியலாளர் நீங்கள் அதிவேகம் என சட்டத்திற்கு முரணான பொய்களைக் கூறி எனது நேரத்தினை வீண்விரயம் செய்துவிட்டீர்கள், நீங்கள் அதிவேகம் எனக் கூறியதுபோல் எனக்கு நீதிமன்றத்திற்கான பற்று சீட்டை தாருங்கள் என கோரியுள்ளார்.
அதற்கு குறித்த தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் நாங்கள் இவாறுதான் இருப்போம் உனக்குத்தான் சட்டங்கள் தெரியவில்லை நீ என்ன வேண்டும் என்றாலும் செய் நாங்கள் பயந்து போகமாட்டோம் எனக் கூறி தேவையற்ற அநாகரீகமான வார்த்தைப் பிரயோகங்களிலும் ஈடுபட்டுள்ளார்
இவர்கள் 68 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்தது குற்றம் என இவர்கள் குறித்த ஊடகவியலாளரை நிறுத்திய பகுதி வேக எல்லை 70 கிலோமீற்றருக்குரியது என அறிவித்தல் பலகை பொறிக்கப்பட்ட A9 பிரதான வீதி என்பது குறிப்பிடத்தக்கது மேலும் காவல்துறையினரின் அனைத்து செயற்பாடுகளையும் குறித்த ஊடகவியாலாளர் காணொளி எடுத்து வைத்துள்ளமை இச் சம்பவத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றது
குறித்த சம்பவம் தொடர்பில் அக் கிராம வாசிகளை வினவிய பொழுது அண்மையில் இடமாற்றம் பெற்று வந்த குறித்த காவல்துறையினர் வீதியால் செல்பவர்களை பொய்க் குற்றங்கள் கூறி மறித்து இதற்கு நீதிமன்றம் சென்றால் பல ஆயிரங்கள் முடியும் எனக் கூறி இலஞ்சம் பெற்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும் இவ்வாறான நோக்கத்திலே குறித்த ஊடகவியலாளரையும் மறித்துள்ளனர் குறித்த நபர் ஊடவியாளார் என தெரிந்து கொண்டமையினால் தான் தமது முயற்சிகளை கைவிட்டு ஊடகவியலாளரை அனுப்பி உள்ளனர் என அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்