குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீனாவில் 24 ஆண்டுகளின் பின்னர் காணாமல் போன மகளுடன், பெற்றோர் இணைந்து கொண்டுள்ளனர். வாங் மின்குயிங் மற்றும் அவரது மனைவி லியூ டெங்கியாங் ஆகியோரின் மகளான கியூபெங் கடந்த 1994ம் ஆண்டு மூன்று வயதில் காணாமல் போயுள்ளார்.
வாங், தனது மகளை தேடுவதனை எந்தவொரு நேரத்திலும் கைவிடவில்லை. என்றாவது ஒர் நாள் ஓர் பயணியாக தனது டாக்ஸியில் மகள் ஏறுவார் என்ற நம்பிக்கையுடன் வாங் டாக்ஸி சாரதியாக கடமையாற்றி வந்தார். இந்த டாக்ஸி சாரதி தொடர்பில் இணையத்தில் வெளியான ஓர் தகவலைத் தொடர்ந்து, மகள் குடும்பத்தாரைத் தொடர்பு கொண்டுள்ளார்.
வாங் தம்பதியினர் சீனாவின் தெற்மேற்கு நகரான சென்குடுவின் வீதியில் பழ வகைகளை விற்பனை செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். ஓர் நாள், வாடிக்கையாளர் ஒருவர் வழங்கிய பணத்தை மாற்றிக் கொள்வதற்காக அயலில் இருந்த கடையொன்றுக்கு சென்று திரும்பிய சில நிமிடங்களிலேயே மகள் காணாமல் போனதாக வாங் தெரிவித்துள்ளார்.
கடந்த இருபத்து நான்கு ஆண்டுகளாகவே வாங் தம்பதியினர் தமது மகளை தேடும் பணியை கைவிடாது தொடர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில், அவர்களது தேடலுக்கு வெற்றி கிடைத்தமை அவர்களை மட்டுமன்றி அனைவரையும் பூரிப்பில் ஆழ்த்தியுள்ளது.