குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பின்னணியில் மூன்று யூதாஸ்கள் இருக்கின்றார்கள் என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது வேறும் யாருமல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் முதல் கையொப்பத்தையும் மைத்திரியே இட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோப் குழு விசாரணைகளின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமக்கு பல்வேறு வழிகளில் துன்புறுத்தல்களை மேற்கொண்தாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் உறுப்பினர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபடாது முன்நோக்கி நகரவிருந்த பயணத்தை அவர் தடுத்து நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.ராஜபக்ஸ குடும்பத்தின் ஊழல்பேர்வழிகளை பாதுகாப்பதற்கு பிரதமர் நடவடிக்கை எடுத்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஊழல் மோசடிகளில் ஈடுபடும் தரப்பினை பாதுகாக்கும் நோக்கில் சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவடையச் செய்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலின் பின்னர் தேர்தல் தோல்விக்கான பொறுப்பினை ஐக்கிய தேசியக் கட்சியின் மீது சுமத்துவதற்கு ஜனாதிபதி முயற்சித்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரணிலை வெளியேற்ற முயற்சிக்கப்பட்டதாகவும் பின்னர் 113 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ரணில் விக்ரமசிங்க கள்வர்களை பாதுகாத்தால் அதனை விடவும் மைத்திரி கள்வர்களை பாதுகாத்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மூன்று யூதாஸ்கள் இருக்கின்றார்கள், ரணில், மஹிந்த, மைத்திரி ஆகிய மூவருமே இந்த யூதாஸ்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.