குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
சிங்கள மக்கள் நிரந்திரமாக குடியிருக்காத பிரதேசங்களில் சிங்கள கட்சிகள் போட்டியிட்டு பிரதிநிதிகள் தெரிவாகியுள்ளமை தமிழ் அரசியல் கட்சிகளுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், வவுனியா மற்றும் முல்லைத்தீவில் சிங்கள் மக்கள் வசிக்காத பகுதிகளில் தென் பகுதி அரசியல் கட்சிகள் சிங்கள வேட்பாளர்களை பயன்படுத்தி அரசியல் அதிகாரத்தை கட்டியெழுப்ப முயற்சித்து வருகின்றன என கூறியுள்ளார்.
வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் ஒரு சிங்கள குடும்பம் கூட இல்லாத நிலையில், கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தென்பகுதி அரசியல் கட்சிகள் நிறுத்திய 12 வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவிலும் இதே நிலைமை காணப்படுகிறது. புதிய தேர்தல் முறையால் இது நடந்துள்ளது. இந்த நிலைமையானது தமிழ் அரசியல் கட்சிகளுக்கு மிகப் பெரிய சவால். சகல தமிழ் கட்சிகளும் இணைந்து இது சம்பந்தமாக குரல் கொடுக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இது குறித்து கூடிய அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.