மத்திய அரசைக் கண்டித்து சென்னை மெரினா கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்ராலின் உட்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகம், புதுச்சேரியில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்துக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள், வணிகர் சங்கங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், பல இடங்களில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று காலை முதலே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் சென்னை அண்ணா சாலையில் மு.க ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோரும் இதில் பங்கேற்ற நிலையில் ஊர்வலமாக சென்ற அவர்கள் சென்னை மெரீனா கடற்கரை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அண்ணா சாலை-வாலஜா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மு.க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.