பயங்கரவாத தடைச்சட்டத்தை விரைவில் நீக்குவதற்கு; நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளதாக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
மேலும் இலங்கை தொடர்ந்தும் சீர்திருத்த பாதையில் பயணிக்குமென தாம் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றையதினம் இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் நாளை வெள்ளிக்கிழமை வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ளனர்.
இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்ள இலங்கை வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் கண்காணிக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தூதுக்குழுவினரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நல்லாட்சி அரசாங்கத்தின் சிந்தனையும், நடவடிக்கைகளும் மந்தகதியில் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கம் ஜனநாயக பண்புகளிலிருந்து விலகியதன் காரணமாகவே தற்போதைய அரசாங்கமானது பதவிக்கு வந்ததென சுட்டிக்காட்டிய சம்பந்தன், எனினும் இந்த அரசாங்கத்தின் சிந்தனையும் நடவடிக்கைகளும் மந்தகதியில் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரிபடாத, நாட்டிற்குள் ஒரு தீர்வினையே தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதாகவும் புதிய அரசியல் யாப்பில் , அதிகாரங்கள் பகிரப்படுவதனையும், அத்தகைய அதிகாரங்கள் மத்திய அரசினால் மீளப் பெற முடியாத வகையில் அமைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவதில் காணப்படுகின்ற இழுத்தடிப்புக்கள் தொடர்பிலும் சம்பந்தன் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.