குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டால் உடனடியாக பதவி விலக தயாராக இருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எதனையும் எதிர்கொள்ள தயார் என்ற காரணத்தினாலேயே தாம் அந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
பிரதமருக்கோ அல்லது வேறு நபர்களுக்கோ எங்களை அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்க முடியாது. ஜனாதிபதியால் மாத்திரமே எங்களை பதவியில் இருந்து நீக்க முடியும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஏகமனதான முடிவுக்கு அமையவே நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களித்தோம். நாட்டின் நடுநிலையான நிலைப்பாடுகளை கொண்டுள்ள மக்கள் எமது முடிவு சரியானது என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.
பெரும்பான்மையான மக்களின் நிலைப்பாடுகளுடன் நாங்கள் இணைந்து கொள்வோம். இது குறித்து எதிர்காலத்தில் தேவையான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.