குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் வி்க்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களித்த, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 அமைச்சர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனை இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட உள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான யோசனையில் இதுவரை 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதுடன் இன்று காலை அதனை தான் சபாநாயகரிடம் கையளிக்க உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகித்து கொண்டு சிறப்புரிமைகளை அனுபவித்து வரும் இந்த அமைச்சர்கள், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களித்தால், அவர்கள் மீது நாடாளுமன்ற நம்பிக்கை இழந்து விட்டதாகவும் இதனால், அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகிக்க இவர்களுக்கு தகுதியில்லை எனவும் குறிப்பிட்டு, 16 அமைச்சர்களுக்கு எதிராக தனித்தனியாக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
காலையில் மகிந்த ராஜபக்சவுடன் விஜேராம வீதியில் உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டு, இரவில் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியுடன் உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளும் இந்த அமைச்சர்கள் அரசாங்கத்திற்கு வினையாக உள்ளனர் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.