குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கோட்டை என கூறப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு வசம் விழுந்தது. நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுக்கான முதலாவது அமர்வு இன்றைய தினம் காலை வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம. பற்றிக்நிறைஞ்சன் தலைமையில் நடைபெற்றது. அதன் போது தவிசாளர் தெரிவின் போது , தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிலிப் பற்றிக் ரொஷானை பிரேரித்தனர். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் நல்லதம்பி சசிக்குமாரை பிரேரித்தனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரேரித்த பிலிப் பற்றிக் ரொஷான் 7 வாக்குகளை பெற்று தவிசாளராக தெரிவானார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பிரேரித்த நல்லதம்பி சசிக்குமார் 6 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
நெடுந்தீவு பிரதேச சபையானது 13 உறுப்பினர்களை கொண்ட சபையாகும். அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் 4 ஆசனங்களையும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் 06 ஆசனங்களையும் சுயேட்சை குழு 02 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது. அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேட்சை குழுவின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளனர்.