குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதி சபாநாயகராக பதவி வகித்து கொண்டு திலங்க சுமதிபால, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு பிரதமருக்கு எதிராக கருத்து வெளியிட்டமை தவறானதாகும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் இது குறித்து விசாரணை நடத்துவதாக உறுதியளித்துள்ளார். அப்படி இருக்கும் போது தினேஷ் குணவர்தன, நாடாளுமன்றத்தின் நற்பெயரை இல்லாமல் செய்ய முயற்சிக்கின்றார். திலங்க சுமதிபால அமைச்சர்களின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டது மட்டுமல்ல நிலையியல் கட்டளை சட்டங்களை தவறாக அர்த்தப்படுத்தியுள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இரகசிய வாக்கெடுப்பை நடத்த முடியும் என்று அவர் கூறினார். சபாநாயகர் மற்றும் ஜனாதிபதியை தெரிவு செய்யும் போதே இரகசிய வாக்கெடுப்பை நடத்த முடியும். இப்படி பக்கசார்பாக நடந்து கொண்டமை காரணமாகவே கட்சி தலைவர்களின் கூட்டத்தில் திலங்க சுமதிபால குறித்து நான் பேசினேன். அப்படி இருக்கும் போது தினேஷ் குணவர்தன காலையிலேயே இங்கு வந்து நாடாளுமன்றத்தின் கௌரவத்தை இல்லாமல் செய்ய பார்க்கின்றார் எனவும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.