குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை ஊடாக அரசாங்கத்திற்குள் பல நெருக்கடிகள் உருவாகியுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன் காரணமாக உடனடியாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த அரசாங்கத்திற்கு நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பந்துல குணவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதனால், பிரதமர் மாத்திரமல்ல, முழு நல்லாட்சி அரசாங்கமும் விரைவில் வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளமையானது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கிடைத்த பிரதான வெற்றி எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசாங்கம் தன்னிடம் இருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது எனவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் செய்யக்கூடிய எதனையும் தற்போது அரசாங்கத்தினால் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பல பிரதிபலன்களை எதிர்வரும் நாட்களில் காணமுடியும். உடனடியாக தேர்தலை நடத்த வேண்டிய நிலைமையானது இதன் இறுதி முடிவாகும். கூட்டு எதிர்க்கட்சி அந்த முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றது எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளாரர்