குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சில அரசியல்வாதிகள் பணத்திற்காக நாட்டை காட்டிக் கொடுப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அதிகார மோகம் கொண்ட அரசியல்வாதிகள் இவ்வாறு பணத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே தேசிய ஐக்கியம் மிகவும் முக்கியமானது என வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். 1948ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கப் பெற்ற போது ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒரே விதமான பொருளாதார நிலைமை காணப்பட்டது எனவும், தேசிய ஐக்கியம் காரணமாக ஜப்பானியர்கள் முன்னேறிச் சென்றதாகவும், நாம் இன்னமும் பின்னடைவு அடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாத்தளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சபாநாயகர் பங்கேற்ற நிகழ்வு காரணமாக மாத்தளையில் நடைபெறவிருந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் பாதிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சபாநாயகரின் ஹெலிகொப்டர் மைதானத்தில் தரையிறக்கப்பட்டமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.