குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமைச்சர் பதவியில் இருந்து விலகி, ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை பெற்றுக்கொள்ளுமாறு அந்த கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அலரி மாளிகையில் அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கான அரசியல் சபையை நியமிக்கும் வாக்கெடுப்பில் நவீன் திஸாநாயக்க அதிகளவான வாக்குகளை பெற்றததை அடுத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை வகிப்பவர் அமைச்சரவையில் அங்கம் வகிக்காத ஒருவராக இருக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சி கொள்கை ரீதியான முடிவை எடுத்துள்ளதால், நவீன் திஸாநாயக்க பொதுச் செயலாளராக நியமிக்கப்பட வேண்டுமாயின் அவர் தனது அமைச்சர் பதவி விலக வேண்டும்.
இது சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் திஸாநாயக்க, முழுமையான அதிகாரங்களுடன் கூடிய பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டால், அது குறித்து சிந்தித்து பார்க்க தான் தயார் என கூறியுள்ளார். எனினும் அப்படியான அழைப்பு எதுவும தனக்கு இதுவரை கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.