குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
வடக்கு மாகாணத்தில் காணப்படும் சில பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களுக்கு தீர்வை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதே தவிர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பிரதமருக்கும் வேறு உடன்பாடுகள் எதுவும் கிடையாது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனது இல்லத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பிரதமருக்கும் இருக்கும் இரகசிய உடன்பாடுகள் காரணமாகவே, கூட்டமைப்பு பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அவருக்கு ஆதரவாக வாக்களித்ததாக தெற்கில் உள்ள ஊடகங்களும், அரசியல் சக்திகளும் கூறினால் அது முற்றாக உண்மைக்கு புறம்பானது.
நாட்டில் காணப்படும அரசியல் சூழலை நோக்கும் போது என்றும் இல்லாத வகையில் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கி உள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஆதரவளித்து வருகிறதே தவிர வேறு நோக்கங்கள் இல்லை.
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட சந்தர்ப்பத்தில் மட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் அனைத்து நடவடிக்கைகளின் போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களின் வாக்குகள் மிகவும் முக்கியமானவை எனவும் சுமந்திரன் கூறியுள்ளார்.