குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துக்கொள்வதில்லை என நேற்றிரவு நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியினர், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்களுக்கு ஏற்படுத்தி வரும் அவமதிப்புக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில், அமைச்சரவைக் கூட்டத்தை பகிஷ்கரிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லை என்பது குறித்து தீர்மானம் ஒன்றை எடுக்கும் வரை அமைச்சரவை கூட்டத்தில் கலந்துக்கொள்வதில்லை தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்தகட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
பிரதமருக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்த அமைச்சர்கள் மட்டுமல்லாது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஏனைய அமைச்சர்களும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள மாட்டார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேசிய அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என செயற்குழுக் கூட்டத்தில் அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க அந்த யோசனையை வழிமொழிந்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என்ற கடுமையான நிலைப்பாட்டை, அனுரபிரியதர்ஷன யாப்பா, எஸ்.பி.திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகர, டிலான் பெரேரா,லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உட்பட சிலர் முன்வைத்துள்ளனர்.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 பேர் தயாரித்த அறிக்கையும் செயற்குழுவில் சமர்பிக்கப்பட்டுள்ளது. இங்கு கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அவசரப்படாமல், கட்சி என்ற வகையில் முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 41 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அதேவேளை அரசாங்கத்தில் இருந்து விலக அனுமதி கோரியுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அமைச்சர்களின் கோரிக்கையை ஏற்பதா இல்லையா என்பது குறித்து இன்று அல்லது நாளை கூடிய தீர்மானம் ஒன்றை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.