சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு 4 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை பார்க்கவரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டி நடத்தினால் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ள பல்வேறு அமைப்புகள் போட்டியை காண ரசிகர்கள் நேரில் செல்லக்கூடாது எனவும் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான கிரிக்கெட் போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. பல்வேறு தரப்பில் இருந்தும் வரும் கடும் எதிர்ப்புகளால் இந்த போட்டியை காணவரும் ரசிகர்கள் பலவித சோதனைகளுக்கு பின்பே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் எந்த செயலும் செய்யக்கூடாது. போட்டி நடைபெறும்போது சட்ட விரோத செயல்கள், வன் முறைகளில் ஈடுபட்டாலும், இன வெறியை தூண்டும் வகையில் கோஷம் எழுப்பினாலும் மைதானத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.
கைத்தொலைபேசியையும் ஏனைய பொருட்களையும் மைதானத்தில் உள்ள காவலர்களிடம் ஒப்படைத்து விட்டே போட்டியை பார்க்கலாம் போன்ற பல கட்டுப்பாடுகள் ரசிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் கிரிக்கெட் போட்டி எதிர்ப்பு அலைகள் காரணமாக சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 4 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள் எனவும் அவர்கள் கிரிக்கெட் மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும் அரண் போல நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுதவிர அருகில் உள்ள பறக்கும் புகையிரத நிலைய பகுதிகளிலும், தண்டவாளங்களிலும் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள் எனவும் போட்டியை காணவரும் ரசிகர்களை யாரேனும் தடுத்து வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் அந்த பகுதியில் எந்தவித போராட்டங்களுக்கும் அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது