குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தனது வாழ்வாதாரத்திற்கா வீதியோரத்தில் சோளம் அவித்து விற்பனை செய்து வந்த ஏழை ஒருவரின் கொட்டில் ஒன்று விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி புதுமுறிப்பு பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் வீதியோரம் சிறிய கொட்டில் ஒன்றை அமைத்து ஒரு மேசை, கதிரை மற்றும் சில உபகரணங்களை வைத்து நாளாந்தம் சோளம் அவித்து விற்பனை செய்து வரும் சின்னவன் என்பவரின் கடையே விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.
கடை முற்றாக எரிந்து அழிந்துள்ளதுடன் அதிலிருந்த அவரது சிறியளவிலான முதலீடும் சாம்பலாகிவிட்டது. ஜந்து பிள்ளைகளின் தந்தையான இவர் நாளாந்தம் சோளம் விற்பனை செய்து கிடைக்கின்ற வருமானத்திலேயே தனது பிள்ளைகளின் கல்விசெலவு மற்றும் குடும்பச் செலவுகளை கவனித்து வந்துள்ளார்.
மனைவி சோளம் அவித்து விற்பனையில் ஈடுபட இவர் சோளம் கொள்வனவு செய்தல் மற்றும் கிடைக்கின்ற இதர கூலித் தொழில்களையும் மேற்கொண்டு வருகின்றவர். தற்போது இவரின் கடை எரிக்கப்பட்டுள்ளமையினால் வீதியோரத்தில் மரத்தின் கீழ் சோளம் அவித்து விற்பனை செய்து வருகின்றார். மிக வறிய நிலையில் காணப்படுவதனால் இவரால் மீண்டும் தனது கடையை அமைக்க முடியாத நிலையில் உள்ளார்.