Home இலங்கை சென்றார்கள் – பார்த்தார்கள் – திரும்பினார்கள்….

சென்றார்கள் – பார்த்தார்கள் – திரும்பினார்கள்….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

முல்லைத்தீவில் சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயவென சென்ற வடமாகாண சபை உறுப்பினர்கள் அது தொடர்பில் உரியமுறையில் செயற்படவில்லை என சக உறுப்பினர்களே குற்றம் சாட்டி இருந்தனர்.

முல்லைக்கு படையெடுப்பு. 
முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோதமான சிங்கள குடியேற்றங்கள் , சட்டவிரோத மீன் பிடிமுறைமைகள் தொடர்பில் நேரில் சென்று ஆராயவென வடமாகாண சபை உறுப்பினர்கள் நேற்றைய தினம் முல்லைத்தீவுக்கு படைஎடுத்திருந்தனர்.
முன்னதாக காலை 09 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடிய வடமாகாண சபை உறுப்பினர்கள் சட்டவிரோத குடியேற்றங்கள் நிகழ்வும் பகுதிகளுக்கு செல்ல ஆயத்தமானார்கள்.
ஆரம்ப இடத்தில் மாவை.
அவ்வேளை தமிழரசு கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா , வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினரான தனது மகனுடன் அவ்விடத்திற்கு வந்திருந்தார்.
மாயமான மாவை. 
சிறிது நேரம் மாகாண சபை உறுப்பினர்களுடன் உரையாடிய பின்னர், உறுப்பினர்கள் எல்லை கிராமங்களை நோக்கி படையெடுக்கும் போது மாவை சேனாதிராஜா அவர்களுடன் செல்லவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர்களை காணவில்லை. 
அதேவேளை யாழ்.மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் நேற்றைய தினம் மாகாண சபை உறுப்பினர்களுடன் பயணிக்கவில்லை.
ரவிகரன் தலைமையில் நகர்வு. 
வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன்,  அமைச்சர்களான ஞா. குணசீலன், க. சர்வேஸ்வரன், அனந்தி சசிதரன், க.சிவநேசன் மற்றும் உறுப்பினர்களான, எம்.கே.சிவாஜிலிங்கம் , பா. கஜதீபன், கேசவன் சஜந்தன், அயூப் அஸ்மீன், எஸ்.சுகிர்தன், பா.சத்தியலிங்கம், ஜெயசேகரம், புவனேஸ்வரன், பசுபதிப்பிள்ளை, குருகுலராஜா, தவநாதன், லிங்கநாதன், அரியநாயகம், இந்திராஜா, பரம்சோதி, குகதாசன் உள்ளிட்டோர் து. ரவிகரன் தலைமையில் எல்லை கிராமங்களில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் சட்டவிரோத மீன் பிடி தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்டனர்.
முதலமைச்சரை காணவில்லை. 
வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை. அதேவேளை முதலமைச்சர் நேற்றைய தினமே  தென்னிந்தியா சென்றமை குறிப்பிடத்தக்கது.
விகாரையை சுற்றி பார்த்தார்கள். 
அந்நிலையில் முதலில் கொக்கிளாய் பகுதிக்கு சென்ற உறுப்பினர்கள் குழு அங்கே தமிழர்களுக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரைக்கு சென்று விகாரையை சுற்றி பார்த்த பின்னர் அங்கிருந்த பௌத்த பிக்குவுடனும் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
முகத்துவரத்திற்கு செல்லவில்லை. 
பின்னர் அங்கிருந்து முகத்துவார பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் வாடிகள் அமைத்து அங்கு குடியேறியுள்ள சிங்கள மக்கள் வாழும் பகுதிகளுக்கு செல்வார்கள் என எதிர்பாத்த போதும் அங்கே ஒருவரும் செல்லவில்லை.
குழுவினரை வழிநடத்தி அழைத்து சென்ற ரவிகரன் அடுத்ததாக உறுப்பினர்களை விகாரையில் இருந்து , கொக்கிளாய் பகுதியில் சட்டவிரோத மீன் பிடி முறைமையை மேற்கொள்ளும் பகுதிக்கு அழைத்து சென்றார்.
தென்னிலங்கை மீனவர்களின் பிடிமுறைமையை பார்வையிட்ட உறுப்பினர்கள். 
அப்பகுதியில் பல தென்னிலங்கை மீனவர்கள் வாடிகள் அமைத்து அங்கு தங்கி இருந்து கரை வலைத்தொழில் செய்து வருகின்றார்கள். கரைவலை தொழிலின் போது உழவு இயந்திரங்களை பயன்படுத்தி தொழில் புரிந்து வருகின்றார்கள்.
உறுப்பினர்களை கணக்கில் எடுக்காத தென்னிலங்கை மீனவர்கள். 
அப்பகுதிக்கு வடமாகாண சபை குழுவினர் கொக்கிளாய் பொலிசாரின் பாதுகாப்புடன் சென்ற போதிலும் அங்கு தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிங்கள மீனவர்கள் எந்த சலசலப்பும் இன்றி தமது தொழிலில் கவனம் செலுத்திய வண்ணம் இருந்தனர்.
கரை வலை இழுக்கும் போது உழவு இயந்திர வலுவை பயன்படுத்தினார்கள். அதனை வடமாகாண சபை உறுப்பினர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு சில நிமிடங்கள் நின்ற பின்னர் , அங்கிருந்து சென்றனர்.
தமிழ் மீனவர்களின் குறைகளை கேட்கவில்லை. 
நாயாறு பகுதியிலும் சட்டவிரோதமான முறையில் வாடிகள் அமைத்து தென்னிலங்கையில் இருந்து வந்த சிங்கள மீனவர்கள் மீன் பிடியில் ஈடுபட்டு வரும் பகுதிக்கு வடமாகாண சபை குழுவினர் வருகை தருவதாக அறிந்த அப்பகுதி மீனவர்கள் நாயாறு பகுதியில் கூடி இருந்தனர்.
வடமாகாண சபை உறுப்பினர்களிடம் தமது குறைகளை எடுத்து கூற என. அதற்காக அப்பகுதி மீனவர்கள் சுமார் 30 நிமிடங்கள் அப்பகுதியில் காத்திருந்தனர்.
வடமாகாண சபை குழு அப்பகுதிக்கு வந்ததும் , காத்திருந்த தமிழ் மீனவர்களை சந்திக்காது , நாயாறு கடற்கரை பகுதிகளில் சிங்கள மீனவர்கள் வாடிகள் அமைத்துள்ள பகுதி ஊடாக தமது வாகனத்தை செலுத்தி , வாகனத்தில் இருந்தவாறே வாடிகளை பார்வையிட்டு சென்றனர்.
சொந்த இடத்தில் தொழில் செய்ய முடியவில்லை என்கின்றார்கள் தமிழ் மீனவர்கள்.
நாயாறு பகுதியில் பிறந்து வளர்ந்த எம்மை இப்பகுதியில் தொழில் செய்வதற்கு சிங்கள மீனவர்கள் அனுமதிக்கின்றார்கள். அல்ல , நாம் இப்பகுதிகளை விட்டு சில கிலோமீற்றர் தூரம் தள்ளியே தொழில் செய்கின்றோம்.
இப்பகுதி மீனவர் ஒருவர் தான் இப்பகுதியில் தான் மீன் பிடிப்பேன் இந்த கரையில் தான் படகை அணைப்பேன் என சிங்கள மீனவர்களுடன் வாதிட்டு அது தொடர்பில்  நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து சுமார் 8 மாத வழக்கு விசாரணையின் பின்னர் அந்த மீனவர் இப்பகுதியில் தொழில் செய்வதற்கு நீதிமன்று அனுமதித்தது.
இங்கு வாடி அமைத்து தொழில் செய்யும் சிங்கள மீனவர்கள் தடை செய்யப்பட்ட தொழில் முறைமைகளான , வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடியில் ஈடுபடுவது , சுருக்கு வலை பாவித்து மீன் பிடியில் ஈடுபடுவது என தொழில் புரிகின்றார்கள். அவ்வாறு தொழில் புரியும் மீனவர்களிடம் இருந்து தப்பி பிழைத்து வரும் மீன்களையே நாம் பிடித்து எமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துகின்றோம்.
இவ்வாறாக பல பிரச்சனைகளுக்கு மத்தியில் வாழும் நாம் இன்றைய தினம் (நேற்றைய தினம்) இப்பகுதிக்கு வடமாகாண சபை குழு வருவதாக அறிந்து எமது பிரச்சனைகளை அவர்களிடம் எடுத்து கூற என வந்திருந்தோம். ஆனால் அவர்கள் எம்மை சந்தித்து எமது குறைகளை கேட்கவில்லை.
நாயாறில் வாடி அமைத்து தொழில் செய்யும் சிங்கள மீனவர்களுடன் எதனையும் கதைக்க வில்லை. ஏதோ சுற்றுலா வந்து சுற்றி பார்த்து செல்வது போன்று சுற்றி பார்த்து விட்டு சென்று விட்டனர் என அப்பகுதி தமிழ் மீனவர்கள் தெரிவித்தனர்.
நாயாறில் வடமாகாண சபை உறுப்பினர்கள் எவரும் வாகனங்களை விட்டு இறங்காது அப்பகுதி ஊடாக வாகனத்தை செலுத்தி வாடிகளை பார்வையிட்டு சென்றனர்.
கடலுணவுடன் மதிய விருந்து. 
அங்கிருந்து அலம்பில் பகுதிக்கு சென்றவர்கள். அங்கு ஒரு வீட்டிற்கு சென்று மதிய போசன உணவாக கடலுணவு விருந்தை உட்கொண்டு , சில நிமிடங்கள் இளைப்பாறிய பின்னர் அங்கிருந்து முலைத்தீவு மாவட்ட செயலகம் நோக்கி புறப்படனர்.
ஒரு சில நிமிட போராட்டம். 
மாவட்ட செயலகத்தில் ஒன்று கூடிய உறுப்பினர்கள் ஒரு சில நிமிடங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை நடாத்தி விட்டு மாவட்ட செயலரை சந்தித்து அவரிடம் மகஜரை கையளித்த பின்னர் உறுப்பினர்கள் மாவட்ட செயலகத்தில் இருந்து களைந்து சென்றனர்.
வாகனம் வாங்காத உறுப்பினர்கள். 
இதேவேளை வடமாகாண சபை உறுப்பினர்கள் தமக்கு வாகனம் வேண்டும் என வடமாகாண சபை ஆரம்பித்த முதல் சபையில் குரல் எழுப்பி வந்த நிலையில் தற்போது உறுப்பினர்களுக்கு வாகன போமிட் வழங்கப்பட்டு விட்டது.
இருந்த போதிலும் பல உறுப்பினர்கள் வாகனங்களை கொளவனவு செய்யவில்லை. அதனால் நேற்றைய தினம் முல்லைத்தீவு சென்ற போது தமது சக உறுப்பினர்களின் வாகனங்களில் தொற்றி சென்று இருந்தமை குறிபிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More