குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தி அடைந்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி மக்கள் அளித்த ஆணை தொடர்பில் சந்திரிக்கா வெளியிட்டு வரும் கருத்துக்கள், ஜனாதிபதியை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது சந்திரிக்கா, கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார். அரசாங்கத்தில் தொடர்ந்தும் சுதந்திரக் கட்சி அங்கம் வகிக்க வேண்டுமென தெரிவித்திருந்தார்.
எவ்வாறெனினும், 2015ம் ஆண்டில் ஏனைய சக்திகளுக்காக மக்கள் வாக்களிக்கவில்லை எனவும், தலைமைத்துவத்திற்காகவே வாக்களித்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏன் ஓர் வேட்பாளரை களமிறக்க முடியவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சந்திரிக்கா மத்திய செயற்குழுக் கூட்டங்களில் அடிக்கடி பங்கேற்பதில்லை எனவும் இதனால் கொள்கை விவகாரங்களில் அவருக்கு போதியளவு தெளிவில்லை எனவும் ஜனாதிபதி கடுமையாக சாடியுள்ளார்.