குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முல்லைத்தீவு கடலில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக அமெரிக்க நிபுணர்கள் குழு முல்லைத்தீவு சென்றுள்ளது. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் இருந்து முல்லைத்தீவு கடலில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதுடன் கடல் நீர் மட்டம் சுமார் 6 அடி உயர்ந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு முறை கடல் கொந்தளிப்பாகவும் நிற மாற்றத்துடன் காணப்பட்டதாகவும் கூறி சுனாமி ஏற்படும் என்ற அச்சத்தில் கடற்பரைகளில் மக்கள் வழிபாடுகளை நடத்தியிருந்தனர். அத்துடன் கடல் கொந்தளிக்க போகிறது என்ற அச்சத்தில் முல்லைத்தீவு வாசிகள் நகரில் கடைகளை மூடிவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.
யாழ் பல்கலைக்கழத்தின் புவியியல் பிரிவினரும், கொழும்பில் இருந்து சென்ற நிபுணர்களும் முல்லைத்தீவில் ஆய்வுகளை நடத்தியிருந்தனர். எனினும் விசேடமாக எதனையும் கண்டறிய முடியவில்லை.
இது குறித்து அறிவிக்கப்பட்டதும், அமெரிக்காவின் சுற்றாடல் மற்றும் புவியியல் மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தும் நிறுவனத்திற்கு யாழ் பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்திருந்ததுடன் அவர்கள் வந்து தற்போது ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.அமெரிக்க நிபுணர்கள், முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர். கே. தனபாலசுந்தரம் மற்றும் இடர்முகாமைத்துவ அதிகாரிகள் முல்லைத்தீவு கடலுக்கு சென்று ஆரம்ப கட்ட ஆய்வுகளை நடத்தியுள்ளனர்.