ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினியை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து மத்திய அரசிடம், ஆளுநர் கருத்து கோர வேண்டுமா என்பது குறித்து அரச தலைமை வழக்கறிஞர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நளினி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தான் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளதாகவும் தனக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரித்துள்ளதால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் எனக் கோரியிருந்தார்.
அத்துடன் இது குறித்து மத்திய அரசின் கருத்தை மாநில அரசு கேட்கவேண்டும். எனினும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 161-ன் கீழ் முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிபிஐ விசாரித்த வழக்கில் தண்டனை பெற்றவர்களை, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161-ன் கீழ் முன்கூட்டியே விடுதலை செய்ய முடிவு செய்தால், அதுகுறித்து மத்திய அரசிடம் மாநில ஆளுநர் கருத்து கோர வேண்டுமா?’ என கேள்வி எழுப்பியது. இதுதொடர்பாக பதிலளிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்