மாந்தை மேற்கு பிரதேச சபையை, வரலாற்றில் முதன் முறையாக ஐக்கிய தேசியக்கட்சி இன்று வியாழக்கிழமை (12) கைப்பற்றியுள்ளது. -மாந்தை மேற்கு பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகள் இன்று வியாழக்கிழமை(12) காலை 10 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச சபையில் வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரைஞ்சன் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த சபையின் தலைவர் பதவிக்கு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஆசீர்வாதம் சந்தியோகு (செல்லத்தம்பு) மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் வேதநாயகம் மஹிந்தன் ஆகிய இருவரது பெயர்களும் முன் மொழியப்பட்டது.
-சபையில் 25 உறுப்பினர்களில் 23 உறுப்பினர்கள் பகிரங்க வாக்களிப்புக்கு ஆதரவு வழங்கிய நிலையில் பகிரங்க வாக்களிப்பு இடம் பெற்றது.
-இதன் போது ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஆசீர்வாதம் சந்தியோகு (செல்லத்தம்பு) 15 வாக்குகளையும், தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் வேதநாயகம் மஹிந்தன் 6 வாக்ககளையும் பெற்ற நிலையில் அதி கூடிய வாக்குகளை பெற்ற ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஆசீர்வாதம் சந்தியோகு மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிட்ட 11 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 03 உறுப்பினர்களும், சுயேச்சைக்குழுவைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும் ஆசீர்வாதம் சந்தியோகுவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் வேதநாயகம் மஹிந்தனுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் 06 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
தவிசாளர் தெரிவில் உதய சூரியனைச் சேர்ந்த இருவரும், முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த இருவரும் நடு நிலை வகித்தனர்.
-அதனைத்தொடர்ந்து உப தலைவர் தெரிவு இடம் பெற்றது. உப தலைவர் தெரிவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் முஹம்மத் ஹனீபா முஹம்மத் தௌபீக் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த முஹம்மத் செல்ஜி ஆகிய இருவரது பெயர்களும் முன் மொழியப்பட்டது.
இதன் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் முஹம்மத் ஹனீபா முஹம்மத் தௌபீக் 15 வாக்குகளையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த முஹம்மத் செல்ஜி 7 வாக்குகளையும் பெற்ற நிலையில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் முஹம்மத் ஹனீபா முஹம்மத் தௌபீக் மாந்தை மேற்கு பிரதேச சபையின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 11பேரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 3 பேரூம், சுயேச்சைக்குழுவின் ஒரு உறுப்பினரும் இவருக்கு தலைவராக தெரிவு செய்யப்பட்ட முஹம்மத் ஹனீபா முஹம்மத் தௌபீக்கிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த முஹம்மத் செல்ஜியிற்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 06 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவரும் வாக்களித்தனர். இரண்டு உறுப்பினர்களை சபையில் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் ஒருவர் உட்பட, உதயசூரியனைச் சேர்ந்த இருவரும் பிரதித் தவிசாளர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை