குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுவில் எதிர்காலத்தில் ஏதேனும் விடயம் ஒன்று சம்பந்தமாக ஏகமனதான தீர்மானங்களை எடுக்க முடியாது போகும் என அந்த கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் ராஜாங்க அமைச்சருமான பியசேன கமகே தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுவில் இரண்டு அணிகள் உருவாகி உள்ளதால், முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது பெரும்பான்மையான உறுப்பினர்களின் முடிவுகளை மட்டும் ஏற்றுக்கொள்ள நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு இதற்கு முன்னர் தீர்மானம் ஒன்றை எடுத்த போதிலும் நல்லாட்சி அரசாங்கத்தில் வகிக்கும் அமைச்சு பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்ற தீர்மானத்தை எடுக்கவில்லை. இந்த நிலையில், 16 அமைச்சர்கள் தமது பதவிகளில் இருந்து விலகிக்கொண்ட போதிலும் மத்திய செயற்குழுவில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
மேலும் அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ளதால், ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் நியமிக்கப்படுவது குறித்தும் தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை. அப்படியான முடிவுகள் எடுக்கப்பட்டமை குறித்து தனக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் பியசேன கமகே குறிப்பிட்டுள்ளார்.