திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மேற்கொண்டிருந்த காவிரி உரிமை மீட்புப் பயணம் நேற்று நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து ஸ்டாலின் உள்ளிட்ட 9 கட்சிகளின் தலைவர்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்த உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த முதலாம் திகதி முதல் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை, சாலை, புகையிரத மறியல் என போராட்டங்கள் நடந்து வருகின்றன. திமுக ஆதரவுக் கட்சிகளின் சார்பில் கடந்த 5-ம் திகதி முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து திமுக ஆதரவுக் கட்சிகளின் சார்பில் காவிரி உரிமை மீட்புப் பயணம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ம் திகதி ஆரம்பமாகியிருந்தது.
கடந்த 6 நாட்களாக திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர் மாவட்டங்களில் அவர் பயணம் மேற்கொண்டு விவசாயிகள், பொதுமக்களைச் சந்தித்து உரையாடினார்.
காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் இந்தப் பயணத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
அதேவேளை கடலூரில் இருந்து கிண்டி ஆளுநர் மாளிகை நோக்கி நடப்பதாக இருந்த கார் பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது