குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
முல்லைத்தீவு மாவட்டத்தில், காவற்துறையினர் விரட்டி சென்ற போது, காவற்துறையினரிடம் இருந்து தப்பிக்க குளத்தினுள் பாய்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு உடையார்கட்டு தெற்கை சேர்ந்த 29 வயதுடைய மகேஸ்வரன் ராமகிருஷ்ணன் எனும் நபரே உயிரிழந்தவர் ஆவார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,
தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மற்றும் புத்தாண்டு தினமான இன்றைய தினமும் நாட்டில் உள்ள மதுபான சாலைகள் மூடப்பட்டுள்ளன.
அந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (13) மதியம் மூன்று இளைஞர்கள் உடையார்கட்டு பகுதியில் உள்ள குளம் ஒன்றின் அருகில் இருந்து மது அருந்துவதாக காவற்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து புதுக்குடியிருப்பு காவற்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
காவற்துறையினரை கண்ட இளைஞர்கள் மூவரும் காவற்துறையினரிட் இருந்து தப்பி செல்வதற்காக குளத்தினுள் குதித்துள்ளனர். அதன் போது ஒருவர் நீந்தி மறுகரையை அடைந்து தப்பித்துள்ளார். இன்னுமொருவர் நீந்த முடியாது காவற்துறையினரிடம் சரணடைந்துள்ளார். மற்றையவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
நீரில் மூழ்கியவர் நீண்ட நேரமாகியும் காணாததால், காவற்துறையினர் தம்மிடம் சரணடைந்த நபரை அவ்விடத்தில் விட்டு விட்டு, நீரில் மூழ்கியவரை மீட்க நடவடிக்கை எடுக்காது அவ்விடத்தில் இருந்து சென்றுவிட்டனர்.
காவற்துறையினர் தம்மிடம் சரணடைந்த நபரை விட்டு சென்ற பின்னர் குறித்த நபர், ஊரவர்களுக்கு தகவல் வழங்கி ஊரவர்கள் நீரில் மூழ்கிய இளைஞரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மதியம் 2 மணியளவில் நீரில் மூழ்கிய இளைஞரை மாலை 6 மணியளவில் ஊரவர்கள் சடலமாக மீட்டனர். இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் காவற்துறையினருக்கு அறிவித்த போது, இரவு 8 மணிக்கு பின்னரே போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர்.
நீரில் மூழ்கியவரை காப்பாற்றாது காவற்துறையினர் விட்டு சென்றமை தொடர்பில் ஊரவர்கள் காவற்துறையினருடன் கருத்து முரண்பாட்டிலும் ஈடுபட்டனர்.