குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மு. தமிழ்ச்செல்வன்…
கிளிநொச்சி குளத்தின் பின் பகுதி நாளுக்கு நாள் குறைவடைந்து செல்கிறது எனவும் பல தடவைகள் பபலரின் கவனத்திற்கு கொண்டு வந்த போதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பொது மக்களால் சுட்டிக்காட்டுப்பட்டுள்ளது. இப்படியே சென்றால் வடிவேல் பாணியில் கிளிநொச்சி குளத்தை காணவில்லை என பொது மக்கள் கூறும் நிலை ஒரு நாள் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சியின் குளத்தின் பின்புறமாக காணப்படுகின்ற பகுதியில் அதாவது டிப்போ இரத்தினபுரம் வீதியின் இடதுபுறமாக குளத்தின் நீரேந்து பிரதேசம் சட்டவிரோதமாக சிலரால் பிடிக்கப்பட்டு வேலிகள் அமைத்து மண் நிரப்பட்டு வருகிறது. மீள்குடியேற்றத்தின் ஆரம்பத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தின் அளவினை விட தற்போது மேலும் அதிகளவான பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசம் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான குளத்தின் நீரேந்த பிரசேதசம். எனவே இந்த பிரதேசங்கள் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களமோ, கரைச்சி பிரதேச செயலகமோ அல்லது மாவட்டச் செயலகமோ இதற்கு எல்லாவற்றுக்கு மேலாக மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவினரோ எவரும் தங்களின் கண் முன்னே இடம்பெறுகின்ற இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பு தொடர்பில் அக்கறையின்றி சமூக நலனை விரும்புகின்ற பொது மக்களிடையே விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குளத்தின் பின்பகுதியும் மற்றும் கரையோர பகுதிகளும் நாளுக்கு நாள் காணாமல் போவது என்பது எதிர்காலத்தில் பாரிய சுற்றுச் சூழல் பாதிப்பினை ஏற்படுத்தும் எனவும் கிளிநொச்சி நகரிற்கு மிக அருகில் இருக்கும் குளம் என்பதனால் இந்த பாதிப்பு நகருக்கும் ஏற்படும் என்றும் சூழலியலாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.