எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மீண்டும் கடுமையாக்குவது தொடர்பில் அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து இந்திய மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
வன்கொடுமைக்கு ஆளாகும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் முறைப்பாடுகள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 1989-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சட்டத்தை எதிர்த்து மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான கொடுமைகள் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக கருத்து தெரிவித்தது.
மேலும் இந்த சட்டத்தின் கீழ் முறைப்பாடு அளித்தால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி அல்லது தனிநபரை உடனடியாக கைது செய்யக் கூடாது எனவும் மேலதிகாரிகளின் அனுமதி பெற்று விசாரணை நடத்த வேண்டும் எனவும் பொய் புகார்கள் மூலம் அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடாது எனவும் உத்தரவிட்டது.
நீதிமன்றின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்சி, எஸ்டி பிரிவினர் கடந்த 2-ம் திகதி நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்தியிருந்தனர். இதன்போது வடமாநிலங்களில் ஏற்பட்ட கலவரத்தில 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கா னோர் காயமடைந்தனர்.
இதையடுத்து எஸ்சி, எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. எனினும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்ட நடைமுறையில் மாற்றம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் நாட்டில் தற்போது எஸ்சி, எஸ்டி.க்களின் எதிர்ப்பையும் கோபத்தையும் தணிக்க, வன்கொடுமை தடுப்பு சட்டம், முன்பு எப்படி இருந்ததோ அதே அம்சங்களுடன் உடனடியாக அவசர சட்டம் கொண்டுவர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது