குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வலி.வடக்கு மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த இராணுவத்தினரின் பாரிய ஆயுத கிடங்கு அமைந்திருந்த பகுதி என சந்தேகிக்கப்படும் பகுதியில் இருந்த கட்டடங்கள் இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டு உள்ளது. வலி.வடக்கில் கடந்த 28 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 683 ஏக்கர் நிலப்பரப்பு கடந்த 13 அதன் உரிமையாளர்களிடம் இராணுவத்தினரால் மீள கையளிக்கப்பட்டது.
அந்நிலையில் மயிலிட்டி வடக்கில் கட்டம் ஒன்றினை சுற்றி பாரிய மண் அணைகள் கட்டப்பட்டு காணப்பட்டன. குறித்த கட்டடத்தினை இராணுவத்தினர் இடித்தழித்து விட்டு கட்டடத்தின் இரும்பு கூரைகளை தமது வாகனங்களில் ஏற்றி சென்றுள்ளனர்.
குறித்த கட்டம் பலத்த பாதுகாப்பான மண் அணைகளுக்கு நடுவில் காணப்பட்டமையால் , அக் கட்டடத்தினுள் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு அந்த கட்டடம் ஆயுத களஞ்சியமாக பாவிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
அதேவேளை குறித்த கட்டடத்தை அண்டிய பகுதிகளில் வெடிபொருட்களின் வெற்று கோதுகள் பெருமளவில் உரைபைகளில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது.
மயிலிட்டி வடக்கில் பாரிய ஆயுத கிடங்குகள் மற்றும் ஆயுத களஞ்சியங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அதனால் அப்பகுதிகளை மீள கையளிக்க கூடாது என தேசிய போர் வீரர்கள் முன்னணி அமைப்பு கடந்த 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேனாவிடம் கோரியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.