குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் டூமா நகரில் விசாரணைகளை நடாத்துவதற்கு, ரசாயன ஆயுதப் பயன்பாட்டுத் தடை அமைப்பின் நிபுணர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ரஸ்யா அறிவித்துள்ளது.
ரசாயன ஆயுதங்கள் குறித்த நிபுணர்கள் கடந்த சனிக்கிழமை சிரியாவின் தலைநகர் டமஸ்கஸிற்கு சென்றுள்ளனர். எனினும்
பாதுகாப்பு காரணங்களினால் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் டூமாவிற்கு செல்ல முடியாத நிலைமை காணப்பட்டது என ரஸ்யா தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் தடயங்களை அழிக்கும் பணிகளில் ரஸ்யாவும், சிரிய அரசாங்கமும் ஈடுபட்டு வருவதாகவும் இதனால்தான் உடனடியாக சம்பவ இடத்தில் விசாரணை நடத்த அனுமதிக்கவில்லை என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் 7ம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்பபடும் ரசாயன ஆயுதத் தாக்குதல் குற்றச்சாட்டு ஓர் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு என, சிரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ரசாயன ஆயுத தாக்குதலினால் நாற்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.குளோரின் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடிய இரசாயன ஆயுதங்களை சிரிய அரசப் படையினரும், ரஸ்யாவும் பயன்படுத்தியுள்ளதாக பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் கடுமையான குற்றம் சுமத்தி வருகின்றன.
இதேவேளை, ரஸ்யா தடயங்களை அழிக்கவில்லை என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் செர்ஜீ லெவ்ரோவ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.