காஷ்மீரில் கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 8 வயது சிறுமியின் அடையாளத்தை வெளியிடுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் ஏற்கெனவே வெளியிட்ட ஊடகங்களுக்கு 10 லட்சம் ரூபா அபராதம் விதித்தும் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டமை குறித்து சில ஹிந்தி, ஆங்கில செய்தி தொலைக்காட்சி அலைவரிசைகள்;, பத்திரிகைகள் சிறுமியின் புகைப்படம், அடையாளம், பெயர் உள்ளிட்டவற்றை வெளியிட்டு செய்தி வெளியிட்டன.
இந்த விவகாரத்தை டெல்லி உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்து வழக்கை விசாரித்தது. இதன்போது ஊடகங்களுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்த நீதிபதிகள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுபவர்களின் புகைப்படங்கள், அடையாளங்கள், பெயர்கள் உள்ளிட்டவற்றை அவர்களின் அனுமதியின்றி வெளியிடுவது அந்தரங்க, தனிப்பட்ட உரிமையை மீறுவதாகும்.
அதிலும் போஸ்கோ சட்டப்படி குழந்தைகள் பாதிக்கப்பட்டால், அவர்களின் பெயர்கள், அடையாளம், புகைப்படம், உள்ளிட்டவற்றை வெளியிடக்கூடாது என்பது தெரியாதா எனவும் கண்டித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கேட்டு செய்தி வெளியிட்ட 12 ஊடகங்களுக்கு கடிதம் அனுப்புமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது