Home இலங்கை எங்கள் தெருவெங்கும் அன்னை பூபதிகள்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…

எங்கள் தெருவெங்கும் அன்னை பூபதிகள்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…

by admin

ஈழத்தில் அன்னையர்களின் போராட்டத்திற்கு தனித்துவமான இடமுண்டு. தாய்மை உலகில் உன்னதமான உணர்வு. மனிதர்கள் மாத்திரமின்றி அனைத்து உயிரினங்களிலும் தாய்மை மிகவும் உன்னதமானதாக கருதப்படுகிறது. விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களிலும் தாய்மையின் மகத்துவத்தை உணரலாம். ஈழத்து அன்னையர்களின் வாழ்வு துயரத்தில் தோய்ந்தது. இன்றைக்கு ஈழமெங்கும் அன்னையர்கள் தவித்து வாழும் ஒரு வாழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக, அவர்களின் விடுதலைக்காக, நீதிக்காக ஈழத்தில் அன்னையர்கள் தெருவில் வாழும் ஒரு போராட்டத்திற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

அன்னையர்கள் கண்ணீர் சிந்தும் ஒரு நாடு எத்தகைய நீதியில் இருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது. கிளிநொச்சியிலும் வவுனியாவிலும் அன்னையர்கள் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். தெருவில் வீழ்ந்து புரண்டழும் இந்த தாய்மாரைப் பார்த்தும் இலங்கை அரசும் உலகமும் நீதியை வழங்காமல் மௌனித்து அநீதி காக்கிறது.அன்னையர்களின் கண்ணீருக்கு பதில் அளிக்காதிருக்கும் மனிதாபிமானமற்ற கொடிய முகத்தையே நாம் உணரவேண்டியுள்ளது.

அன்னையர்கள் தலைமுறைகளால் பூமியை உருவாக்கியவர்கள். தங்கள் மாசற்ற தாய்மையால் எல்லோராலும் நேசிக்கப்படுபவர்கள். அன்னையர்கள் தவித்து வாழும் தேசங்களில் வடக்கு கிழக்கு தமிழ் தேசமும் ஒன்று. ஈழம் முழுக்க முழுக்க அன்னையர்களின் தவிப்பாலும் கண்ணீராலும் ஏக்கத்தாலும் காத்திருப்பினாலும் மூழ்கியதொரு தேசம். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தொடரும் நிலையிது.

ஈழத்தில் இப்போது நடக்கும் போராட்டங்களைப் பார்க்கும்போது அர்ஜன்டீனா அன்னையர்களின் போராட்டமே நினைவுக்கு வருகிறது. அந்நாட்டில் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டபோது, அவர்களை மீட்க அன்னையர்கள் தெருவுக்கு வந்து போராட்டங்களை நடத்தினர். சைக்கிளில் சென்ற தமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டதை நினைவுபடுத்தி, கடதாசிச் சைக்கிள்களை செய்து வைத்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மிகவும் துயரமும் மனித மாண்புக்கு இழிவு சேர்க்கும் செயலுமாக, போராட்டத்தில் ஈடுபட்ட அன்னையர்களையும் காணாமல் ஆக்கப்பட்டனர். ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக அன்னையர்கள் தம்மை உருக்கி காணாமல் போனபடி போராட்டத்தை நடத்துவதற்கு ஒப்பானதொரு செயலே இது.

இன்று தியாகி அன்னை பூபதியின் நினைவுநாள். ஏப்ரல் 19 1988ஆம் ஆண்டு இந்தியப் படைகளுக்கு எதிராக உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தவர் அன்னை பூபதி. இவர் பத்துப் பிள்ளைகளின் தாய். ஆனாலும் தன் தாயகத்து பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்று உண்ணா விரதப் போராட்டத்தை முன்னெடுத்தவர். இவர் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் அன்னையர் முன்னணியின் முதன்மைச் செயற்பாட்டாளர். இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் யுத்தம் நடைபெற்றபோது, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும், உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அன்னையர் முன்னணி சார்பில் போராட்டத்தை மேற்கொண்டார்.

அன்னையர் முன்னணியின் கோரிக்கைக்கு இந்தியப் படைகள் செவிசாய்க்கவில்லை. அன்னையர் முன்னணிக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன. 1988இல் ஜனவரி 4ஆம் திகதி திருகோணமலையிலும் பெப்ரவரி 10ஆம் திகதி கொழும்பிலும் அன்னையர் முன்னணிக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அன்னையர் முன்னணியின் கோரிக்கைகளை இந்தியப் படைகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்த அன்னையர் முன்னணி தீர்மானித்தது.

சாகும்வரையிலான போராட்டத்திற்கு பல அன்னையர்கள் முன்வந்தனர். எனினும் ஒருவர் போராட்டத்தில் ஈடுபடுவதென தீர்மானிக்கப்பட்டது. இதன்படி குலுக்கல் முறையில் போராட்டத்தில் ஈடுபடுபவர் தெரிவு செய்யப்பட்டார். முதலில் அன்னம்மா டேவிட் தெரிவு செய்யப்பட்டார். பெப்ரவரி 14 மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் உண்ணா நோன்பு இருந்தபோது அன்னம்மா டேவிட் கடத்தப்பட்டமை காரணமாக இவரது உண்ணாவிரதப் போராட்டம் தடைப்பட்டது. இதனையடுத்தே அன்னை பூபதி மார்ச் 19 போராட்டத்தில் குதித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட அன்னை பூபதி “சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” என்று கடிதம் எழுதி வைத்தார். நீர் மட்டும் அருந்தியபடி, உணவை விடுவித்து போராட்டத்தில் ஈடுபட்டார் அன்னை பூபதி. உண்ணா விரதப் போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்கள், அன்னை பூபதியின் பிள்ளைகள் கடத்தப்பட்டபோதும் இவரது உண்ணிவிரதப் போராட்டம் தொடர்ந்தது. இந்திய படைகளினால் இவரது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் சரியாக ஒரு மாத்தின் பின்னர் ஏப்ரல் 19 அன்னை பூபதி உயிர் துறந்தார்.

இந்திய நாட்டின் அகிம்சை முகத்தை திலீபன் என்ற போராளி கிழித்தெரிந்த நிலையில் அன்னை பூபதியின் அறப்போராட்டம் ஊடாக ஈழப் பொதுமக்களால் இந்திய அரசின் அகிம்சை முகம் கிழிக்கப்பட்டது. அன்னைபூபதி ஈழத் தமிழ் மக்களின் அறப்போராட்டத்தின் முகம். இந்திய படைகளின் அராஜகங்களுக்கு எதிரான அற வழி ஆயுதம். ஜனநாயக வழிப் போராட்டத்தின் அடையாளம். இன்றைக்கு ஈழத்தில் தாய்மார்கள் தெருத் தெருவாக வீழ்ந்து புரண்டு போராட்டத்தில் ஈடுபடும்போது அன்னை பூபதியே நினைவுக்கு வருகிறார். இன்றைக்கு எங்கள் தெருவெல்லாம் அன்னை பூபதிகள் உள்ளனர்.

அன்னை பூபதி இந்திய அரசின் போரை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே உண்ணா விரதம் இருந்து உயிர் துறந்தவர். போரை நிறுத்தி, தம் தாயகத்து பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கமே அவரிடமிருந்தது. இன்று எங்கள் தெருவெங்கும் அன்னையர்கள் போராடுவதும் பிள்ளைகளுக்காகவே. காணாமல் ஆக்கப்பட்ட தம் பிள்ளைகளை விடுவிக்க வேண்டும் அவர்களின் உண்மை நிலை என்ன என்று அறிவிக்க வேண்டும் என்று போராடுகின்றனர்.

தம்மை உருக்கி, தம்மை அழித்து மேற்கொள்ளும் இந்தப் போராட்டத்திற்கும் அன்னை பூபதியின் போராட்டத்திற்கும் மிக நெருக்கம் உண்டு. எங்கள் அன்னையர்கள் – அன்னை பூபதிகள் நடத்தும் போராட்டங்கள் இலங்கை அரசின் கொடிய இன ஒடுக்குமுறை முகத்தை அம்பலம் செய்கிறது. அன்னை பூபதியின் 29 ஆண்டு நினைவுநாள் என்பது அன்னையர்கள் இத் தீவில் மூன்று தசாப்தங்களாக இருக்கும் புத்திர விரத்தின் அடையாளத்தையும் ஈழச் சனங்களின் வாழ்வையும் உணர்த்தும் ஒரு நாளாகும்

அன்னைபூபதி அம்மாவின் நினைவு நாட்களின் முதல்நாள் ஈழநாதம் பத்திரிகையில் அவரது ஒளிபட இணைப்பு வரும். ஈழம் முழுதும் பெப்ருவரி 10 முதல் மார்ச் 19 வரை அவரது நினைவில் மூழ்கியிருக்கும். பள்ளிக்கூடத்திலும் தெருவிலுமாக எங்கள் வாழ்வோடு அவரது நினைவு நாட்கள் கலந்திருந்தன. ஈழத் தாய் சமூகத்தின் குறியீடே அன்னை பூபதி.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More