இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உச்சநீதிமன்றில் தொடர்ந்த வழக்கினை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். குறித்த வழக்கில் வெளிநாடுகளை சேர்ந்த குற்றவாளிகள் சிலருக்கான தொடர்பு குறித்து கண்டறிய சி.பி.ஐ. அதிகாரிகளை கொண்ட பல்நோக்கு சிறப்பு விசாரணை முகமையை 1997-ம் ஆண்டு மத்திய அரசு அமைத்தது.
இந்த முகமை, விசாரணையின் முன்னேற்றம் குறித்த ரகசிய அறிக்கையை ஒவ்வொரு மாதமும் சென்னையில் உள்ள முதலாவது கூடுதல் நீதிமன்றில் தாக்கல் செய்து வருகிறது.
இந்த நிலையில் ஆயுள் தண்டனை பெற்று தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சார்பில் உச்சநீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் சிறப்பு விசாரணை முகமை தாக்கல் செய்துள்ள அறிக்கையில் சிறையில் வாடும் தன்னையும் தொடர்புபடுத்தி உள்ளதாகவும் அதில் பல தகவல்கள் முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டு உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில் மூல மனுவின் மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் சி.பி.ஐ. தரப்பில் முன்னிலையாக வேண்டிய சிரேஸ் சட்டத்தரணிக்கு உடல்நலம் சரி இல்லாமல் உள்ளதால் வழக்கின் மீதான விசாரணையை ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.