Home உலகம் கூட்டமைப்பினர் ஆதரவு கோரியமைக்கான ஆதாரங்கள் உண்டு. – ஈ.பி.டி.பி.

கூட்டமைப்பினர் ஆதரவு கோரியமைக்கான ஆதாரங்கள் உண்டு. – ஈ.பி.டி.பி.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் ஆதரவு கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொலைபேசி ஊடாக பேசியமைக்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன எனவும் தேவை எனில் அவற்றை வெளியிட நாம் தயார் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

வாக்குறுதிகளை தந்தனர். 
உள்ளுராட்சி சபை தேர்தல் முடிவுற்ற பின்னர் வாக்குகள் எண்ணும் பணிகள் யாழ்.மத்தியகல்லூரியில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்பொழுது வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானமும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும்  யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளை கூட்டமைப்பு எடுத்துக்கொள்வதெனவும் தீவகத்திலுள்ள மூன்று சபைகளையும் எமக்கு விட்டு தருவதாகவும்,  வாக்குறுதிகளை வழங்கினார்கள்.
பகைமையை மறப்போம் என்றார்கள். 
அத்துடன் கடந்த கால பகைகளை மறக்க அவர்கள் கோரியிருந்தனர்.
சாவகச்சேரி நகரசபையில் எமது ஆதரவை பெற்ற பின்னர் மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தனும் இதையே கூறியிருந்தார்.  ஆனால் அதனையெல்லாம் மறந்து நாம் ரத்தம் சிந்திய தீவகப்பகுதிகளை கைப்பற்ற எமக்கு எதிராக அவர்கள் களமிறங்கினார்கள்.
அதற்காக கூட்டமைப்புடன் நாம் பகைமை காட்டப்போவதில்லை. மக்களிற்கான சேவைகளை ஆற்ற ஒத்துழைப்போம். ஈபிடிபியுடன் கூட்டமைப்பினர்  எவரும் பேசவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்த கருத்து தொடர்பில் கேட்ட போது ,
தொலைபேசியில் பேசினார்கள். 
எமது கட்சியின் செயலாளர் டக்ளஸின் தொலைபேசி மாதாந்த சிட்டையை காட்டத்தயார். வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் என பலர் பேசியிருந்தனர்.
ஒவ்வொருவரும் நாட்கணக்கில் மாறி மாறி பேசிக்கொண்டேயிருந்தனர்.எமது உறுப்பினரான முடியப்பு ரெமீடியஸ் வீட்டிற்கு தான் தேடி நேரே வரவாவென எம்.ஏ.சுமந்திரன் கேட்டார். அதற்கு ரெமீடியஸ் மறுத்துவிட்டார்.
எங்களிடமும் பலரும் தொடர்ந்தும் உதவி கேட்டு தொலைபேசி வழியே அழைத்தனர். செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் நாடாளுமன்றில் நேரடியாக இவர்கள் உதவி கேட்டனர்.
கூட்டமைப்பினருக்கு சபைகளை கைப்பற்ற நாம் தேவை.ஆனால் மக்களிடம் ஈபிடிபியிடம் ஆதரவு கேட்டமைபற்றி தெரியக்கூடாதென இரட்டை வேடம் போடுவதாக மேலும் தெரிவித்தார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More