குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….
நாடாளுமன்றத்தின் புதிய அமர்வுகள் ஆரம்பமாகும் எதிர்வரும் மே 8 திகதி நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வார்கள் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 அல்லது 5 ஆக குறையலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
‘ நாங்கள் மகிழ்ச்சியாக மே மாதம் 8 ஆம் திகதி எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம். எமக்கு தெளிவான அரசியல் பயணம் இருக்கின்றது. நாங்கள் எப்போதும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு செல்லவில்லை. மகிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்த பின்னரே நாங்கள் அங்கு சென்றோம். அன்று நான் சந்திரிக்காவுடன் கோபித்து கொண்டு ஐக்கிய தேசியக்கட்சிக்கு சென்றது குறித்து கவலையடைகின்றேன்.
நாங்கள் நீண்டகாலம் அரசியலில் ஈடுபட முடியாது. அரசியலில் இருந்து ஓய்வுபெறும் காலம் வந்து விட்டது. எமக்கு அரசியல் பயணம் ஒன்று இருக்க வேண்டும். இதனால், சரியான இடத்திற்கு செல்ல வேண்டும். மே மாதம் 8 ஆம் திகதி நாங்கள் 16 பேரை தவிர பலர் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வார்கள். அப்போது கட்சியின் மத்திய செயற்குழுவின் பலம் குறைந்து போகும். எனினும் நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர்களை நீக்க மாட்டோம். அது ஜனாதிபதி செய்ய வேண்டிய வேலை எனவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.