குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
13வது திருத்தச் சட்டம் அமுலில் இருக்கும் போது, நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது ஆபத்தானது –
அரசியலமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தச் சட்டம் அமுலில் இருக்கும் போது, நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது என்பது நாட்டை மேலும் சிக்கல்களுக்கு தள்ளும் நடவடிக்கை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்கும் 20வது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரும் ஒப்பந்தத்தை தற்போது ஜே.வி.பி பெற்றுக்கொண்டுள்ளது. இதற்கு கூட்டு எதிர்க்கட்சியின் சிலர் நிபந்தனையுடன் ஆதரவு வழங்குகின்றனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்கும் 20வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதுடன் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்பது அவர்களின் நிபந்தனை. எனினும் இப்படியான முடிவை கூட்டு எதிர்க்கட்சி அதிகாரபூர்வமாக இன்னும் எடுக்கவில்லை. எனினும் கூட்டு எதிர்க்கட்சி அப்படியான தீர்மானத்தை எடுத்தால், தேசிய சுதந்திர முன்னணி அதனை கடுமையாக எதிர்க்கும்.
13வது திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்குள் இருக்கும் போது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிப்பது சரியான நடவடிக்கையல்ல. 13வது திருத்தச் சட்டம் மூலம் முழுமையான மத்திய அரசாங்கம் ஒன்று உருவாகாமல் இருப்பதற்கு பிரதான காரணம் அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் நிறைவேற்று அதிகாரமாகும்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடம் இருக்கும் அதிகாரம் காரணமாகவே, வரதராஜ பெருமாள் தனது எல்லையை மீறி வடக்கு, கிழக்கை தனிநாடாக அறிவித்த போது, மாகாண சபைகயை கலைத்து, அதனை ஆளுநரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்தது எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.