குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
10 நாட்களில் இந்த நாட்டின் பொருளாதாரத்தை தம்மால் கட்டியெழுப்ப முடியும் என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். திறமையான அதிகாரிகளுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ள அவர் மக்கள் மீது சுமையை திணிக்கும் வகையிலான தேவையற்ற வரிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் தங்கம் மீது 15 வீத வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தேவையற்ற ஒன்றாகும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கங்கள் மாறினாலும், அரசியல்வாதிகள் பின்னால் செல்லும் அதிகாரிகளின் செயற்பாடுகளினால் இவ்வாறான நெருக்கடிகள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார். திறமையுடையவர்களுக்கு உரிய இடம் கிடைக்காமையினால் நாட்டின் பொருளாதாரம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது என தெரிவித்துள்ள ரவி கருணாநாயக்க ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் அதிக கரிசனை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.