இந்தியாவில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை புரிபவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் அவசர சட்டத்திற்கு இந்திய மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அண்மையில் காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்பணர்ந்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் உன்னாவ் பகுதியில் இளம்பெண் கற்பழிப்பு, அவரது தந்தை காவற்துறை நிலையத்தில் மரணம் மற்றும் பல்வேறு பகுதிகளில் சிறுமிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் என்பன இந்தியாவில் உள்ள மக்களை பெரும் கொந்தளிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
அத்துடன் இத்தகைய நிகழ்வுகளால் உலக அளவிலும் இந்தியாவின் சிறுவர் மற்றும் பெண்கள் குறித்த நிலையினை இட்டு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் சிறுமிகள் மற்றும் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
சிறுமிகள் மீதான வன்புணர்வு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசின் சார்பில் சட்டத்தரண ஆஜராகி, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை வன்பணரும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றும், இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்றும் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டம் கொண்டு வர இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்பிய பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவையை உடனடியாக கூட்டி குறித்த சட்டம் இயற்ற ஒப்புதல் அளித்ததுடன் சட்டத்தின் கீழ், அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கும் அனுமதி வழங்கினார். இதேவேளை, இந்த அவசர சட்டம் இந்திய ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவரது ஒப்புதல் பெறப்பட்டதும் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.