குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக – தமிழ்ச் செல்வன்…
அழிவடைந்துசெல்லும் நிலையில் காணப்படும் சோழர் காலத்து சிவன் கோவிலான பூநகரி மண்ணித்தலை சிவன் கோவிலை பாதுகாத்து பேணுமாறு பிரதேச பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மண்ணித்தலை சிவன் கோவில் மிகவும் தொன்மையாக வரலாற்றுச் எச்சமாக காணப்படுகிறது. ஆனால் இது தற்போது அழிவடைந்து செல்லும் நிலையில் காணப்படுகிறது. பிரதேச பொது மக்களாகிய நாம் இதனை பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட முடியாது. அவ்வாறான ஒரு முயற்சியில் ஈடுப்பட்ட போதும் தொல்லியல் திணைக்களத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டோம். கோவில் இருக்கும் பகுதியில் ஏதேனும் பணிகளில் ஈடுபடுவது சட்டவிரோதம் என தெரிவிக்கப்பட்டதோடு அவ்வாறு ஈடுப்பட்டால் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவீர்கள் என்றும் எச்சரிக்கைப்பட்டோம். இதனால் பொது மககளால் எவ்வித பணிகளையும் மேற்கொள்ள முடியாது. அதேவேளை தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட சம்மந்தப்பட்டவர்களும் அதனை பாதுகாக்கும் முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த சிவன் கோவில் தொடர்பில் யாழ் பல்கலைகழகத்தின் பேராசிரியர் புஸ்பரட்ணம் தனது குறிப்பில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்
1993 ஆம் ஆண்டு என்னால் இச்சிவாலயம் முதன் முதலாக அடையாளம் காணப்பட்டது. ஆனாலும் கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இப்பிரதேசத்தில் மேலும் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஏற்பட்ட கால தாமதமும், யுத்தத்தின் பாதிப்புகளும் இச்சிவாலயத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தற்போது இச்சிவாலயம் வெடிப்புகளும், இடிபாடுகளும் நிறைந்து தோன்றுவதுடன், முகப்புத் தோற்றம் இடிவடைந்த நிலையிலே காணப்படுகின்றது. இவ்வாலயம் கிட்டத்தட்ட 24 அடி நீளமும், 12 அடி அகலமும் கொண்டது. ஆனாலும் இப்போது 3 அடி நீளமான சுவர்ப் பகுதி மாத்திரமே எஞ்சியுள்ளது. இக்கோவில் கட்டடமானது கடலில் இருந்து எடுக்கப்பட்ட கோறைக் கற்களையும், செங்கட்டிகளையும், சுதை, சுண்ணாம்பு போன்றவற்றையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் இக்கோவில் மிகப் பழைமையான கோவில் என்னும் முடிவுக்கு வரமுடியும். இவ்வாலயம் முழுமையான திராவிட கலை மரபைக் கொண்டு விளங்குவதுடன் அத்திராவிடக் கலையை பிரதிபலிக்கின்ற மிகப் பழைமையான கோவில் இது என்பதில் அறிஞர்கள் மத்தியில் எவ்வித முரண்பாடுகளும் காணப்படவில்லை. ஆனால் கோவில் உருவாக்கப்பட்ட ஆண்டு தொடர்பாக அறிஞர்கள் பலரும் பல்வேறுபட்ட கருத்துக்களை முன் வைத்தாலும், அவர்கள் அனைவரும் திராவிட கலை மரபைக் பிரதிபலிக்கின்ற கோவில் இது என்பதில் மாற்றுக் கருத்தைக் கொண்டிருக்கவில்லை. இக்கோவில் கட்டடத்தில் உள்ள தூண் கிட்டத்தட்ட ஏழு அடி நீளம் கொண்டது. அங்குள்ள சுவர் ஆரம்ப கால சோழர் கலை மரபை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. மேலும் இக்கோவில் மாடமானது ஆரம்ப கால பல்லவ, சோழ, பாண்டிய காலத்தை பிரதிபலிக்கின்றன. மிக முக்கிய அம்சமாக மூன்று அடுக்குகளைக் கொண்ட வகையில் இக்கோவில் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. அது ஆரம்ப கால பல்லவ, சோழ காலத்தைப் பிரதிபலிக்கின்றது. விமானத்தின் மூன்று தளங்களும் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருப்பதுடன், மேலே தூபி வைக்கும் பகுதியானது வட்ட வடிவமாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஏறத்தாழ 14 அடி நீளம் கொண்ட விமானமாக இது கருதப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சிவன் கோவில் ஒன்று எம் கண்முன்னே அழிவடைந்து செல்லும் நிலையில் இருப்பதனை எவரும் கண்டுகொள்ளவில்லை என்றும்.தமிழ் மக்களின் வரலாறு தொடர்பில் அதிகம் பேசுகின்ற அரசியல் தரப்பினர்கள் கூட தமிழர்களின் வரலாற்று தொன்மை ஒன்று அழிவடைந்து செல்வதனை கண்டுகொள்ளாமையும் மக்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே இந்த வரலாற்று தொன்மையான மண்ணித்தலைசிவன் கோவிலை அழிவிலிருந்து பாதுகாப்பதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவசர அவசிய கோரிக்கை விடப்படுகிறது.