தமிழ் மக்களின் மனிதநேயத்தை நான் நன்கு உணர்ந்து கொண்டுள்ளேன் என வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கத்தின் முதலாம் ஆண்டு நிகழ்வில் இன்று (22) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பதாக மத்திய மாகாண ஆளுநராக நான் நிமிக்கப்பட்டபோதும் ஒரு நாளேனும் அக்கடமையினை செய்யாது மீண்டும் வட மாகாணத்திற்கு சேவையாற்ற வந்திருக்கின்றேன். அந்த தருணத்தில் தமிழ் மக்களின் மனிதநேயப் பண்பினை நான் நன்கு அறிந்து கொண்டேன்.
வடமாகாணத்திற்கு நான் ஆளுநராக கடமைக்கு வரும்போது என்னுடய மனைவி அங்கே போகவேண்டாம் என்று சொல்லி அழுதார். நான் இறக்க நேரிடும் என்று கூறினார். இன்று அவரும் இங்கே வடக்கு மாகாணத்திற்கு வந்திருக்கின்றார். அவருக்கும் வடக்கு தமிழ் மக்களின் மனிதநேயம் நன்றாக புரிந்துவிட்டது.
கடந்த வருடங்களை விட மேலும் மேலும் இந்த வட மாகாண மக்களுக்கு சேவையாற்ற முடிவு செய்திருக்கின்றேன்.
நான் வயது முதிர்ந்தவன் கவிஞர் கண்ணதாசன் கூறியதைப் போன்று “வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ” என்றதைபோன்று கடைசியில் வடமாகாண தமிழ் மக்களுக்காக என் உயிரையும் கொடுத்து சேவையாற்ற இங்கு வந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
அம்பலவாணர் கலையரங்கினை கட்டுவதற்காக கனடா, பிரித்தானியா, ஆஸ்ரேலியா, ஜேர்மனி போன்ற பல நாடுகளிலிருந்தும் கோடிக்கணக்கான பணத்தினை பலர் நன்கொடையாக வழங்கியிருக்கின்றார்கள். இதனை பார்க்கும்போது புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மாதம் ஒன்றிற்கு ஒரு டொலர் பணத்தினை அனுப்பினால் இங்கு அபிவிருத்தி செய்வதற்கு அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியே தேவையில்லை என தோன்றுகின்றது.
இங்குள்ள அரசியல் தலைமைகள் தமது வாய்களை திறந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் ஒரு டொலரை மாதம் ஒன்றுக்கு அனுப்புங்கள் என்று கேட்பது கிடையாது. நிச்சயமாக அவர்கள் கேட்பார்களே ஆனால் அவ்வாறு ஒரு பணத்தினை புலம்பெயர் தமிழர்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
இந்த நாட்டில் ஓரிரு நாட்களில் அரசியல் தலைவர்கள் ஆகவேண்டுமானால் ஒரு முறையிருக்கின்றது. அதுதான் இனவாதம், மொழிவாம், மதவாதம் இவற்றில் ஒன்றினை எடுத்துக்கொண்டு பேசினால் ஓர் இரு நாட்களில் தலைவராக முடியும்.
இதனை மக்களாகிய நாம் புரிந்து கொண்டு ஒன்றாக வாழ்வதற்கு உரிய வழிகளை தேடிக்கொண்டு வாழ வேண்டும். அதற்காக நான் பணியாற்றவுள்ளதாக தெரிவித்தார்.