குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் நாட்டுக்கான முக்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் எடுக்கப்படும் என நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். எகலியகொடை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாடு தனியார்மயப்படுத்தப்பட்டு வரும் விதத்தில் முழு நாடும் குறுகிய காலத்தில் விற்பனை செய்யப்பட்டு விடும். இதற்கு நீண்டகாலம் செல்லாது. நாட்டை நேசிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாய் நாட்டை காப்பாற்றும் போராட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து செயற்படுவார் என நம்புகிறேன். இந்த அனர்தத்தில் இருந்து நாட்டை காப்பாற்றி கிடைத்த சிறந்த சந்தர்ப்பம் நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்தன் மூலம் தடுக்கப்பட்டது.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க முன்வந்த ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்தவர்களுடன் நான் பேசினேன். அவர்களை பாதுகாப்பதற்காக உத்தரவாத்தை அளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தவறியதால், அவர்கள் தைரியத்தை இழந்தனர். இதன் காரணமாக நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றது நாடு நிச்சயமற்ற நிலைமைக்கு மாறியுள்ளது எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.